4568. | தாமரை மலர்க்கு உவமை சால்புறு தளிர்க் கை, பூ மருவு பொன் செறி குறங்கிடை பொருந்த, காமம் முதல் உற்ற பகை கால் தளர, ஆசை நாமம் அழிய, புலனும் நல் அறிவு புல்ல, |
தாமரை மலர்க்கு உவமை - தாமரை மலருககு உவமையாகின்ற; சால்பு உறு - சிறப்பு வாய்ந்த; தளிர்க் கை - தளிர்போன்ற (தன் மெல்லிய) கைகள்; பூ மருவு - அழகு வாய்ந்த; பொன்செறி - பொன்னிறமான ஒன்றோடு ஒன்று நெருங்கிய; குறங்கிடை பொருந்த - தொடைகளிடத்தில் பொருந்தவும்; காமம் முதல் - காமம் முதலாக; உற்ற பகை கால்தளர - பொருந்திய உட்பகைகள் அழிந்தொழியவும்; ஆசை நாமம் அழிய - ஆசை என்னும் பெயரே அழியப்பெறவும்; புலனும் நல்லறிவு புல்ல - ஐம்பொறிகளும் (தீய வழியிற் செல்லாது) நல் லுணர்வைப் பொருந்தவும். சுயம்பிரபை தன் இரு கைகளையும் இரண்டு தொடைகளின்மேல் வைத்துக் கொண்டு, உட்பகையையொடுக்கிப் பற்றற்று மனத்தை யோகத்திற் செலுத்தியிருந்தாள் என்பது. காமம் முதல் உற்றபகை: காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம் என்ற உட்பகைகள். 'காமம் முதலுற்ற பகை கால் தளர வாசை நாமம் அழிய' என்றதனால் 'பொய் கொலைகளவே காமம் பொருள்நசை இவ்வகை யைந்தும் அடக்கியது இமயம்' என்று சொல்லப்பட்ட இயமமும், 'புலனும் நல்லறிவு புல்ல' என்றதனால் 'பொறியுணர்வெல்லாம் புலத்தின் வழாமல் ஒரு வழிப்படுப்பது தொகைநிலைப் புறனே' என்று கூறப்பெற்ற பிரத்தியாகாரமும் சொல்லப்பட்டவாறு அறியலாம். கால்தளர்தல் -அழிதல். ஒப்பு: 'காமம் வெகுளி மயக்கமிவை மூன்றின் நாமங் கெடுக்கெடும் நோய்' - குறள்:360. 48 |