4569.நெறிந்து நிமிர் கற்றை நிறை ஓதி நெடு நீலம்
செறிந்து சடை உற்றன தலத்தில் நெறிசெல்ல,
பறிந்து வினை பற்று அற, மனப் பெரிய பாசம்
பிறிந்து பெயர, கருணை கண்வழி பிறங்க,

     நெறித்து - நெறிப்புக் கொண்டு; நிமிர் - நிமிர்ந்து; கற்றை நிறை -
தொகுதியாக நிறைந்த; நெடு நீலம் ஓதி - நீண்ட கருமையான கூந் தலானது;
செறிந்து சடை உற்றன -
அடர்ந்த சடையாகத் திரண்டு அமைந்ததாகி;
தலத்தின் நெறி செல்ல -
பூமியிடத்தில் புரளவும்; வினை பறிந்து பற்று
அற-
நல்வினை, தீவினைகள் ஆகிய இரண்டும் அடியோடு நீங்கவும்; மனப்
பெரிய பாசம் -
மனத்தில் உண்டாகக் கூடிய பெரிய பாசப்பற்று; பிறிந்து
பெயர -
விலகியொழியவும்; கருணை கண்வழி பிறங்க - அருளானது
விழிகளில் தோன்றி விளங்கவும்.

     வினை முடிபு: செல்ல, பற்றற, பெயர, பிறங்க, என்னும் எச்சங்கள் 50
ஆம் செய்யுளிலுள்ள 'இருந்தனள்' என்பதனையே கொண்டு முடியும்.  ஞான
யோகத்தின்முன் கன்ம வினைகள் தீயின்முன் பஞ்சுபோலாகும் என்பது பற்றி
'வினை பறிந்து பற்றற' எனப்பட்டது.  பாசம்: கயிறு - இங்கே உவமையாகு
பெயராய் மனத்தைப் பிணிக்கும் பாசமாயிற்று.  பூமியிற் கிடந்து புரள்வதெனச்
சடைக்கற்றையின் நீளத்ைகை் குறித்தார். அருளைக் கண்ணோட்டம் என்பார்.
ஆதலால், கருணை கண்வழி பிறங்க என்றார்.  பிறிந்து: அடியோடும்
பெயர்க்கப்பட்டு. எதுகை நோக்கிப் 'பிரிந்து' என்ற சொல் 'பிறிந்து' என்றாயது.
                                                           49