அனுமன் மறுமொழி 4586. | அன்னது சுயம்பிரபை கூற, அனுமானும் மன்னு புலன் வென்று வரு மாதுஅவள் மலர்த்தாள் சென்னியின் வணங்கி, 'நனி வானவர்கள் சேரும் பொன்னுலகம் ஈகுவல், நினக்கு' எனல் புகன்றான். |
சுயம்பிரபை - சுயம்பிரபை; அன்னது கூற - அவ்வாறான சொற்களைச் சொல்ல; அனுமானும் - அனுமனும்; மன்னு புலன் வென்று வரு - பொருந்திய ஐம்புலன்களையும் வெற்றி கொண்ட; மாதுஅவள் மலர்த்தாள் - அந்தப் பெண்ணின் தாமரை மலர் போன்ற அடிகளை; சென்னியின் வணங்கி- தலையால் வணங்கி; நினக்கு - உனக்கு; வானவர்கள் நனி சேரும் - தேவர்கள் மிகுதியாகக் கூடி நிற்கும்; பொன்னுலகம் ஈகுவல் - பொன்மயமான தேவருலகத்தை அளிப்பேன்; எனல் புகன்றான் - என்று சொன்னான். மேலுலக நெறியைக் காட்டுமாறு வேண்டிய சுயம்பிரபைக்கு, அவ்வாறே செய்வதாக அனுமன் வாக்களித்தான் என்பது. புலன்களை வென்று தவம் செய்தவாறு அனுமன், அவள் திருவடியை வணங்கினான். 66 |