4598. | பிறங்கு பங்கியான்; பெயரும் பெட்பினில் கறங்கு போன்றுளான், பிசையும் கையினான்; அறம் கொள் சிந்தையார், நெறி செல் ஆய்வினால் உறங்குவாரை வந்து, ஒல்லை எய்தினான். |
பிறங்கு பங்கியான் - விளங்கும் செம்பட்டை மயிரையுடையவன்; பெயரும் பெடபினில் - (தான் நடந்து) செல்லும் தன்மையில்; கறங்கு போன்று உளான் - காற்றாடியை யொத்துள்ளவனாய்; பிசையும் கையினான்- (கோபத்தால்) பிசையும் கைகளையுடையவன்; அறம் கொள் சிந்தையார் - தரும சிந்தனையுள்வர்களும்; நெறி செல் ஆய்வினால் - வழி நடந்துவந்த களைப்பினால்; உறங்குவாரை - தூங்குகின்றவர்களுமாகிய அந்த வானர வீரர்களை; ஒல்லை வந்து எய்தினான் - விரைவில் வந்து சேர்ந்தான். இராமபிரானின் தொண்டில் கருத்தாய்ச் செல்லுவதால் வானரரை 'அறங்கொள் சிந்தையார்' என உயர்த்திக் கூறினார். ஆய்வு: நுணுகுதல் (இளைத்தல்). கை பிசைதல்: கொடுமைக்குறி. பங்கி: ஆண்பால் தலைமயிர். 5 |