4605. | புன் நை வெம் முலைப் புளினம், ஏய் தடத்து உண்ண ஆம்பல் இன் அமிழ்தம் ஊறு வாய், வண்ண வெண் நகைத் தரள வாள் முகப் பெண்ணை நண்ணினார் - பெண்ணை நாடுவார். |
பெண்ணை நாடுவார் - சீதையைத் தேடிச் சென்ற அவ்வானர வீரர்கள்; புள் நை - சக்கரவாகப் பறவைகள் (ஒப்பாகாமல்) வருந்துவதற்குக் காரணமான; புளின வெம்முலை - மணற்குன்றுகளாகிய விரும்பத்தக்க முலைகளையும்; தடத்து ஏய் ஆம்பல் - நீர் நிலையில் பொருந் திய செவ்வாம்பல் மலராகிய; உண்ண இன் அமிழ்து ஊறுவாய் - பருகுமிடத்து இனிய அமிழ்தம் சுரக்கின்ற வாயையும்; தரளம் - முத்துக் களாகிய; வண்ண வெண் நகை - அழகான ஒளிமிக்க பற்களையும்; வாள்முகம் - ஒளி பொருந்திய (தாமரை மலர்களாகிய) முகத்தையு முடைய; பெண்ணை - பெண்ணை நதியாகிய ஒரு பெண்ணை; நண்ணினார் - சென்று சேர்ந்தார்கள். பெண்ணை நதியை ஒரு பெண்ணாக உருவகப்படுத்தினார். பெண்ணை : நதி, பெண்; இச் சொல் நதியைக் குறிக்கும்போது இரண்டாம் வேற்றுமைத் தொகையாகவும் (பெண்ணை - பெண்ணையை), மற்றொரு பொருளான பெண்ணைக் குறிக்கும்போது இரண்டாம் வேற்றுமை விரியாகவும் (பெண் - ஐ) கொள்ள வேண்டும். பெண்ணை நதி: மணற்குன்றுகள், செவ்வாம்பல், முத்துக்கள், தாமரை. பெண்: முலைகள், வாய், பற்கள், முகம். சிலேடையணியை அங்கமாகக் கொண்டுவந்த இயைபுருவகவணி. உவமையாவதற்குரிய சக்கரவாகப் பறவையை உவமேயமாகிய முலைகளிலும் தாழ்த்தி்க் கூறியது எதிர்நிலையணி. முலைகளுக்குப் புளினம் உயர்ச்சியில் உவமையாம். நயம்: பெண்ணை நாடுவோர் பெண்ணை நண்ணினார். இதில் பெண்ணை என்ற சொல் இரட்டுற மொழிதலாக ஒரு பெண்ணுக்கும் பெண்ணையென்னும் நதிக்கும் அமைத்த நயம்காணத்தக்கது. 12 |