4606. | துறையும், தோகை நின்று ஆடு சூழலும், குறையும், சோலையும், குளிர்ந்த சாரல் நீர்ச் சிறையும், தெள்ளு பூந் தடமும், தெண் பளிக்கு அறையும், தேடினார் - அறிவின் நீடினார். |
அறிவின் நீடினார் - அறிவின் எல்லைகளைக் கண்டவர்களான அவ் வானர வீரர்; துறையும் - (அந்த நதியின்) இறங்கு துறைகளிலும்; தோகை நின்று ஆடு சூழலும் - மயில்கள் (களிப்போடு) நின்று கூத்தாடு கின்ற இடங்களிலும்; குறையும் - அந்த ஆற்றின் இடையே இருந்த திட்டுக்களிலும்; சோலையும் - அநத ஆற்றையடுத்த பூஞ்சோலைகளிலும்; குளிர்ந்த சாரல் நீர்ச் சிறையும் - குளிர்ந்த காற்று வீசும் பக்கங்களிலமைந்த நீர்நிலைகளான ஏரி குளங்களிலும்; தெள்ளு பூந் தடமும் - தெளிவான மலர்கள் நிறைந்த தடாகங்களிலும்; தெண் பளிக்கு அறையும் - ஒளியுடன் விளங்கிய பளிங்குப் பாறைகளிலும்; தேடினார் - சீதையைத் தேடினார்கள். தோகை: சினையாகுபெயராய் மயிலைக் குறித்தது. குறை: ஆற்றிடைத் திட்டு (தீவு). 13 |