தசநவ நாடு அடைதல்

4608.ஆடு பெண்ணை நீர் ஆறும் ஏறினார்;
காடு நண்ணினார்; மலை கடந்துளார்;
வீடு நண்ணினார் என்ன, வீசும் நீர் -
நாடு நண்ணினார் - நாடு நண்ணினார்.

     நாடு நண்ணினார் - (சீதையைத்) தேடுவதை மேற்கொண்ட அவ் வானர
வீரர்கள்; நீர் ஆடு பெண்ணை ஆறும் ஏறினார் - யாவரும் வந்து நீராடும்
பெண்ணை நதியைக் கடந்தனர்; காடு நண்ணினார் - பல
காடுகளையடைந்தனர்; மலை கடந்து உளார் - பல மலைகளைத் தாண்டிச்
சென்றனர்; வீடு நண்ணினார் என்ன - முத்தி உலகத்தை யடைந்தவர்களே
போல; வீசும் நீர் - அலை வீசும் நீர்வளத்தால் சிறந்த; நாடு நண்ணினார் -
தசநவ நாட்டையணுகினார்கள்.

     வானரர்கள் பல காடுகளிலும், மலைகளிலும் அலைந்து திரிந்து இறுதியில்
நீர்வளமுள்ள தசநவ நாட்டையடைந்ததற்குப் பல பிறவிகளில் அலைந்து
திரிந்தவன் இறுதியில் முத்தியுலகத்தையடைவதை உவமை கூறினார்.  நாடு -
பிந்தியது: முதனிலைத் தொழிற்பெயர். நாடு நண்ணினார் நாடு நண்ணினார் -
மடக்கணி.                                                     15