பாண்டு மலையின் சிகரத்தை வானரர் அடைதல் 4617. | நீண்ட மேனியான், நெடிய தாளின்நின்று ஈண்டு கங்கை வந்து இழிவது என்னல் ஆம், பாண்டு அம் மலைப் படர் விசும்பினைத் தீண்டுகின்ற தண் சிகரம் எய்தினார். |
நீண்ட மேனியான் - திருவிக்கிரமனாய் நீண்ட வடிவெடுத்த திரு மாலின்; நெடிய தாளினின்று - பெரிய திருவடியிலிருந்து; ஈண்டு - இவ்விடத்தில்தான்; கங்கை வந்து இழிவது என்னலாம் - ஆகாய கங்கை வந்து விழுகின்றதோ என்று சொல்லும்படியாக; அம் பாண்டு மலை - அழகான பாண்டு மலையினது; படர் விசும்பினை - பரவிய ஆகாயத்தை; தீண்டுகின்ற - தொடுவதாய் உயர்ந்துள்ள; தண் சிகரம் - குளிர்ந்த சிகரத்தை; எய்தினார் - (அவ் வானர வீரர்) போய்ச் சேர்ந்தார்கள். தனது சிகரம் வானத்தில் படியுமாறு ஓங்கியுள்ள வெண்மையான பாண்டுமலை, காண்பவர்களுக்குத் திருமாலின் திருவடியிலுதித்த வெண்ணிறக் கங்கையாறு வானத்திலிருந்து இங்கேதான் இறங்குகின்றதோ என்று நினைக்குமாறு தோன்றுமென்பது. தற்குறிப்பேற்றவணி. திருமால் உலகளந்த காலத்து மேலே சத்திய லோகத்திற்குச் சென்ற அந்தப் பிரானின் திருவடியைப் பிரமன் தன் கைக் கமண்டல் நீரால் கழுவி விளக்க அந்தப் பாதப் புனிதநீரே கங்கையாகப் பெருகிற்று என்பதுவரலாறு. 24 |