கலிவிருத்தம் 4628. | பெய்த ஐம் பொறியும், பெருங் காமமும், வைத வெஞ் சொலின், மங்கையர் வாட் கணின், எய்த வஞ்சக வாளியும், வென்ற நல், செய் தவம் பல செய்குநர் தேவரால். |
(அந்த மலையில்)தேவர் - தேவர்கள்; பெய்த ஐம்பொறியும்- (தமது உடம்பில்) பொருந்திய மெய் முதலாய ஐந்து பொறிகளையும்; பெருங் காமமும்- ஐம்புலன்களால் விளையும் பெரிய காம உணர்ச்சியையும்; வைத வெஞ்சொலின் - (பிறர் தம்மை) ஏசிய கொடிய சொற்களையும்; மங்கையர் வாட்கணின் - மகளிரின் வாய் போன்ற கொடிய கண்களால்; எய்த - தூண்டிய; வஞ்சக வாளியும் - வஞ்சகத் தன்மையுள்ள பார்வையாகிய அம்புகளையும்; வென்று - (எளிதிலே) வெற்றிகண்டு; செய் நல் தவம் பல- செய்யத்தக்க அரிய தவங்கள் பலவற்றை; செய்குநர்- செய்கின்றார்கள். ஆல்: ஈற்றசை. தேவர்கள் அந்தத் திருவேங்கட மலைக்கு வந்து ஐம்பொறிகளையும் அடக்கிக் காமவேதனையில்லால் பிறர் தம்மை ஏசினாலும் பழியே பேசினாலும் பொறுத்துப் பெண்களை மனத்தாலுங் கருதாமல் பல தவங்களைச் செய்கின்றார்கள் என்பது. அழிவு நோக்கி வீழ்வதை அறிய முடியாமல் மயக்குதலின் காமப் பார்வையை வஞ்சக வாளிஎன்றார். 35 |