4630. | ஆய குன்றினை எய்தி, அருந்தவம் மேய செல்வரை மேயினர், மெய்ந் நெறி நாயகன்தனை நாளும் வணங்கிய தூய நல் தவர் பாதங்கள் சூடினார். |
ஆய குன்றினை - (வானரவீரர்) அத்தகைய தூய்மையும் சிறப்பும் அமைந்த திருவேங்கடமலையை; எய்தி - அடைந்து; அருந்தவம் மேய செல்வரை - அரிய தவத்தைப்பொருந்திய தவயோகிகளை; மேவினர் - அடைந்து; மெய்ந்நெறி நாயகன்தனை - என்றும் அழியாத மோட்சநிலைக்குத் தலைவனான திருவேங்கடநாதனை; நாளும் வணங்கிய - தினமும் வணங்கி வழிபாடு செய்த; தூய நல்தவர் - தூய்மையான சிறந்த தவத்தையுடைய அப் பெரியவர்களின்; பாதங்கள் சூடினார் - திருவடிகளைத் தம் தலைமேல் சூடி வணங்கினார்கள். திருவேங்கட நாதனை வணங்குகின்ற பெரும்பேறு பெற்றுள்ளவராதலால் அவர்களை 'அருந்தவமேய செல்வர்', 'தூய நல் தவர்' என்றுகூறினார். 37 |