4635. | தெருவின் ஆர்ப்புறும் பல் இயம் தேர் மயில் கருவி மா மழை என்று களிப்புறா; பொருநர் தண்ணுமைக்கு அன்னமும் போகலா; - மருவினார்க்கும் மயக்கம் உண்டாம்கொலோ? |
தெருவின் ஆர்ப்புறும் - வீதிகளில் ஆரவாரிக்கின்ற; பல் இயம் - பல வகை இசைக் கருவிகளின் ஒலிகளை; தேர் மயில் - கேட்டுணர்ந்த மயில்கள் (அந்த முழக்கத்தை); கருவி மா மழை என்று -மழைக்கு முதற்காரணமாகிய மேகத்தின் இடியென்ற மயங்கி; களிப்பு உறா - மகிழ்ச்சியடையமாட்டா; அன்னமும் - (அங்குள்ள) அன்னப் பறவைகளும்; பொருநர் தண்ணுமைக்கு - கூத்தர் முழக்கும் மத்தள வோசை கேட்டு (அதை மேகத்தின் இடியென்று மயங்கி); போகலா - (அதற்கு அஞ்சி) விலகிச் செல்லமாட்டா; மருவினார்க்கு - எப்போதும் கலந்து பழகுகின்றவர்களுக்கு; மயக்கும் உண்டாம் கொலோ - மன மயக்கம் உண்டாகுமோ? (உண்டாகாது). மேகத்தின் இடியோசைகேட்டு மகிழ்ச்சியடைதல் மயில்களுக்கும், அஞ்சுதல் அன்னப் பறவைகளுக்கும் இயல்பு. ஆனால், எப்பொழுதும் அத் தொண்டை நாட்டு வீதிகளில் விழா நடப்பதால் பலவகை வாத்திய ஓசைகளைக் கேட்டுப் பழகிய மயில்களுக்கு அந்த ஆரவாரவொலி மகிழ்ச்சியை உண்டாக்குவதில்லை; அங்குள்ள அன்னப் பறவைகளும் அவ்வாத்திய ஒலி கேட்டு அஞ்சி அகல்வதில்லை; இதனால் பழக்கமே அவற்றிற்குத் துணிவைத் தந்தது என்பது. பொருநர்: கூத்தாடுவோர். போர்க்களம் பாடுவோர், ஏர்க்களம் பாடுவோரென இரு வகையினர். பல் இயம்: தோற் கருவி, துளைக் கருவி, நரம்புக் கருவி, கஞ்சக் கருவி எனப் பலவகைப்படும். வேற்றுப் பொருள் வைப்பணி. 42 |