4636. | தேரை வென்று உயர் தெங்க இளம் பாளையை நாரை என்று இளங் கெண்டை நடுங்குவ; தாரை வன் தலைத் தண் இள ஆம்பலைச் சேரை என்று, புலம்புவ, தேரையே. |
தேரை வென்று உயர் - தேர்போல உயர்ந்த (விரிந்த) தலையை யுடைய; தெங்கு இளம் பாளையை - தென்னை மரத்தின் இளமையான பாளையை(க் கண்டு); இளங் கெண்டை - கெண்டை மீன் குஞ்சுகள்; நாரை என்று நடுங்குவ - (அது தங்களைக் கொத்தித் தின்ன வரும்) நாரையென்று நினைத்து அஞ்சி நடுங்கும்; தாரை வன் தலை - கூர் மையான வலிய நுனியுள்ள; தண் இள ஆம்பலை - அரும்பைக் கொண்ட குளிர்ந்த இளைய அல்லித் தண்டைக் கண்டு; தேரை - தேரை கள்(தவளைகள்); சேரை என்று- (அவை நம்மை விழுங்க வரும்) சாரைப் பாம்பென்று நினைத்து; புலம்புவ - (அஞ்சி) வாய்விட்டு அலறும். ஏ: ஈற்றசை. விரியாத தென்னம்பாளைகள் நாரைகளையும், அரும்புகளையுடைய செவ்வல்லித் தண்டுகள் சாரைப் பாம்புகளையும் வடிவத்தால் ஒக்கும்: தென்னம் பாளையை இளங்கெண்டை மீன்கள் நாரையாகவும், செவ்வல்லித் தண்டினைத் தேரைகள் சாரைப் பாம்புகளாகவும் எண்ணி அஞ்சிப் புலம்பியதாகக் கூறியது மயக்கவணி. சேரை என்பது சாரை என வழங்கும். தாரை: கூர்நுனி (தார்க் குச்சி என்ற தொடரில் கூர்மை என்ற பொருளில் வருவது காண்க). 43 |