சோழ நாட்டை அடைதல் 4439. | அன்ன தண்டக நாடு கடந்து, அகன் பொன்னி நாடு பொரு இலர் எய்தினார்; செந்நெலும் கரும்பும் கமுகும் செறிந்து, இன்னல் செய்யும் நெறி அரிது ஏகுவார். |
பொரு இலர் - ஒப்பு இல்லாதவராகிய வானரவீரர்; அன்ன - அத் தன்மையான வளங்களையுடைய; தண்டக நாடு கடந்து - சிறந்த தொண்டை நாட்டைத் தாண்டிச் சென்று; அகன் பொன்னி நாடு - அகன்ற காவிரிநதி பாயும் சோழநாட்டை; எய்தினர் - சேர்ந்தவர்களாய்; செந்நெலும் கரும்பும் கமுகும் செறிந்து - செந்நெற் பயிர்களும் கரும்புகளும் பாக்குமரங்களும் எங்கும் நெருங்கி; இன்னல் செய்யும் நெறி - இயங்குவதற்குத் தடையாக நின்று துன்புறுத்தும் வழிகளில்; அரிது ஏகுவார் - சிரமப்பட்டுச் செல்பவரானார்கள். தொண்டை நாட்டுக்குத் தண்டகநாடு என்பதும் ஒரு பெயர். காஞ்சிப் புராணத்தில் பல இடங்களில் இப்பெயர் ஆளப்படுவதை வை.மு.கோ. எடுத்துக் காட்டியுள்ளார். காவிரிநதி பாயும் வளத்தால் சோழநாடு முழுதும் செந்நெற்பயிரும் கரும்பும் பாக்கு மரங்களும் எங்கும் நெருங்கி, வருவார் போவாரின் வழியடைத்துத் தடைசெய்து துன்புறுத்தும்என்பது. 46 |