4642. பூ நெருங்கிய புள் உறு சோலைகள்
தேன் ஒருங்கு சொரிதலின், தேர்வு இல,
மீன் நெருங்குறும் வெள்ளம் வெரீஇ, பல
வானரங்கள் மரங்களின் வைகுமால்.

     பூ நெருங்கிய - மலர்களில் படிந்து மொய்க்கின்ற; புள் உறு
சோலைகள் -
வண்டுகள் மிகுதியாகப் பொருந்திய சோலைகள்; தேன்
ஒருங்கு சொரிதலின் -
தேனை மிகுதியாகப் பொழிவதால் (அந்தத் தேனின்
பெருக்கைக் கண்டு); பல வானரங்கள் - (அச் சோலையில் வாழும்) பல
குரங்குகள்; தேர்வு இல - (உண்மையை) ஆராயாமல்; மீன் நெருங்குறும் -
மீன்கள் நிறைந்துள்ள; வெள்ளம் வெரீஇ - நீர் வெள்ளமென்று அச்சமுற்று;
மரங்களின் வைகும் -
(கீழே இறங்காமல்) மரக் கிளைகளிலேயே
தங்கியிருக்கும்.

     ஆல்: ஈற்றசை. சோலைகளிலுள்ள மலர்கள் தேனை மிகுதியாகச்
சொரிவதால் அந்தத் தேனின்பெருக்கை நீர்வெள்ளமென்று தவறாகக் கருதி
அச்சப்பட்டு அங்குள்ள வானரங்கள் யாவும் தரையில் இறங்காமல்
மரங்களிலேயே தங்கும் என்பது மயக்கவணி.  தேன்மிகுதி பெறப்படுவதால்
வீறுகோளணி.  வெருவி என்ற எச்சம் வெரீஇ யெனத் திரிந்தது -
சொல்லிசையளபெடை.                                         49