4643. | தாறு நாறுவ, வாழைகள்; தாழையின் சோறு நாறுவ, தூம்புகள்; மாங்கனி நாறு நாறுவ; நாறு வளர்க்குறும் சேறு நாறுவ, செங்கழுநீர்அரோ. * |
வாழைகள் - வாழை மரங்கள்; தாறு நாறுவ - குலைகள்தள்ளி மணம் பரப்புவன; தூம்புகள் - மூங்கில்கள்; தாழையின் சோறு - தாழை மலர்களின் சுண்ணப் பொடிகள் படியப் பெற்று; நாறுவ - அந்த மணத்தையே வீசுவன; மாங்கனி - மாம்பழங்களின் நறுமணம்; நாறு நாறுவ - நாற்றுகளில் கமழ்வன; நாறு வளர்க்குறும் சேறு - அந்த நாற்றை வளரச் செய்யும் சேறு; செங்கழு நீர் நாறுவ - (அங்கே மலர்ந்துள்ள) செங்கழு நீர்ப் பூக்களின் நறுமணத்தையே பரப்புவன. அரோ: ஈற்றசை. தாழை மரமும் மூங்கிலும் ஒன்றற்கு ஒன்று பக்கத்திலிருப்பதால் தாழை மலரின் சுண்ணப் பொடிகள் படியப் பெற்று மூங்கில்கள் அந்த மணத்தை வீசுமாறும், நாற்றுகள் நன்றாக வளரப் பெற்ற நாற்றங்கால் செங்கழு நீர்மலரின்நறுமணத்தைப் பெறுமாறும் பெருமை வாய்ந்தது சோழநாடு என்பது. 50 |