சோழ நாடும் மலை நாடும் கடந்து பாண்டி நாடு அடைதல்

4644. அனைய பொன்னி அகன் புனல் நாடு ஒரீஇ,
மனையின் மாட்சி குலாம் மலை மண்டலம்
வினையின் நீங்கிய பண்பினர் மேயினார்;
இனிய தென் தமிழ் நாடு சென்று எய்தினார்.

     வினையின் நீங்கிய பண்பினர் - தீவினைகளிலிருந்து நீங்கிய நற்
குணமுடைய வானர வீரர்கள்; அனைய - அத்தகைய வளங்கள் நிறைந்த;
பொன்னி அகல் புனல் நாடு -
காவிரிநதி பாயும் அகன்ற நீர்வளமிக்க
சோழநாட்டை; ஒரீஇ - விட்டு நீங்கி; மனையின் மாட்சி குலாம் - இல்லறச்
சிறப்புக்கள் மிகுந்து விளங்கும்; மலை மண்டலம் - மலைநாடாகிய சேர
நாட்டை; மேயினார் - சேர்ந்தவர்களாகி (அதையும் நீங்கி); இனிய தென்
தமிழ்நாடு -
இனிமையான தமிழ் வழங்கும் தமிழ் நாடாகிய பாண்டி
மண்டலத்தை; சென்று எய்தினார் - போய்ச் சேர்ந்தார்கள்.

     காவிரியாறு பாய்ந்து செழுமை வாய்த்துள்ளதால் சோழநாடு 'புனல் நாடு'
என்ற பெயருடன் விளங்குகிறது.  சேர நாட்டவர் இல்லறவொழுக்கத்தில்
தவறாது நடப்பவராதலால் அதற்கு 'மனையின் மாட்சி குலாம்' என்று
அடைமொழி கொடுக்கப் பெற்றது.  மலை மண்டலம்: மலைநாடு; சேரநாடு.
செந்தமிழ்நாடு : பாண்டிநாடு.                                      51