4646. என்ற தென் தமிழ் நாட்டினை எங்கணும்
சென்று நாடித் திரிந்து, திருந்தினார்,
பொன்றுவாரின் பொருந்தினர் போயினார் -
துன்று அல் ஓதியைக் கண்டிலர், துன்பினார்.  *

     என்ற - மேற்கண்டவாறு சிறப்பித்துக் கூறப்பட்ட; தென் தமிழ்
நாட்டினை -
பாண்டிய நாட்டை; திருந்தினார் - ஒழுக்கத்தால் சிறந்து
விளங்கிய அந்த வானர வீரர்கள்; எங்கணும் திரிந்து சென்று நாடி -
எல்லாவிடங்களிலும் அலைந்து தேடிப் பார்த்து; துன்று அல் ஓதியை -
அடர்ந்த இருள் போன்ற கூந்தலையுடைய சீதையை; கண்டிலர் -
காணாதவர்களாய்; பொன்றுவாரில் - இறக்கும் நிலையில் உள்ளவர் போல;
துன்பினார் பொருந்தினர் -
மிகத் துன்பமடைந்தவர்களாய்; போயினார் -
செல்லலானார்கள்.

     பாண்டிய நாட்டிற அப்பால் தேடிப் பார்க்கத் தேசம் எதுவுமில்லாமல்
கடலேயிருத்தலால், சீதையைத் தேடும் ஊக்கம் குறைந்து வானர வீரர்
உயிரற்றவர் போலச் செயலற்றுச் சென்றார்கள் என்பது. அல் ஓதி: உவமைத்
தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை. ஓதி: பெண்ணின் கூந்தல்.
                                                          53