4662.'பரதனும், பின்னுளோனும்,
      பயந்தெடுத்தவரும், ஊரும்,
சரதமே முடிவர்; கெட்டேன்! ''சனகி''
     என்று உலகம் சாற்றும்
விரத மா தவத்தின் மிக்க
      விளக்கினால், உலகத்து யார்க்கும்
கரை தெரிவு இலாத துன்பம்
      விளைந்தவா!' எனக் கலுழ்ந்தான்.

     பரதனும் - பரதனும்; பின் உளோனும் - (அவனுக்குப் பின்
பிறந்தவனான) சத்துருக்கனனும்; பயந்து எடுத்தவரும் - (இராமன் முதலிய
நால்வரையும்) பெற்றெடுத்த தாய்மார் (கோசலை, சுமித்திரை, கைகேயி ஆகிய)
மூவரும்; ஊரும் - அந்த அயோத்தி நகர மக்களும்; சரதமே முடிவர் -
மெய்யாகவே இறப்பார்கள்; கெட்டேன் - ஆ! கெடுவேன்; சனகி என்று
உலகம் சாற்றும் -
சீதை என்று உலகத்துச் சான்றோர் பாராட்டிக் கூறும்;
விரத மா தவத்தின்மிக்க -
விரதத்தோடு கூடிய பெருந்தவத்தால் மேம்பட்ட;
விளக்கினார் -
விளக்குப் போன்றவளான ஒரு மகளால்; உலகத்து யார்க்கும்
-
உலகத்திலுள்ள எவர்க்கும்; கரை தெரிவு இலாத துன்பம் - கரைகாண
முடியாத பெருந்துன்பம்; விளைந்த ஆ - வந்து சேர்ந்ததே; என - என்று
சொல்லி; கலுழ்ந்தான் - (அங்கதன்) கலங்கி வருந்தினான்.

     ஊர்: இடவாகுபெயர்.  சீதை பிறந்த குலத்திற்கும் புகுந்த குலத்திற்கும்
விளக்கம் செய்பவளாதாலால் அவளை விளக்கு என்றார்.  கெட்டேன் :
இரக்கக் குறிப்பையுணர்த்துவது. ஆ: இங்கே இரக்கத்தையும் வியப்பையும்
உணர்த்தி நின்றது.

     இச் செய்யுள் உணர்த்தும் அவலச் சுவை காண்க.                15