4668. | 'நாடுதலே நலம் இன்னும்; நாடி, அத் தோடு அலர் குழலிதன் துயரின் சென்று, அமர் வீடிய சடாயுவைப் போல வீடுதல் பாடவம்; அல்லது பழியிற்று ஆம்' என்றான். |
இன்னும் நாடுதலே நலம் - இனிமேலும் சீதையைத் தேடிப் பார்த்தலே நற்செயலாகும் (ஆதலால்); நாடி - நாம் தேடியும் (அச்சீதையைக் காணா விட்டால்); அத்தோடு அலர் குழலிதன் - இதழ்களையுடைய பூக்கள் பொலிந்த கூந்தலையுடைய சீதையின்; துயரின் சென்று - (இராவணனால் நேர்ந்த) துன்பத்திற்காக (அவளைக் காக்க) எதிரே போய்; அமர் வீடிய - அதனால் ஏற்பட்ட போரில் உயிர்மாய்ந்த; சடாயுவைப் போல - சடாயுவைப் போல; வீடுதல் - (நாமும் சீதையைத் தேடும் செயலில்) உயிர் விடுதல்; பாடவம் - பெருமையாகும்; அல்லது - அப்படிச் செய்யாது நீங்கள் கருதியபடி இப்போதே உயிரை விடுவது; பழியிற்று ஆம் - பழிக்கு இடமாகும்; என்றான் - என்று கூறினான். நம்மால் முடிந்தவரை எல்லாவிடங்களிலும் சீதையைத் தேடிப் பார்த்தும் அவள் அகப்படாவிட்டால் அப்போது நாம் உயிர்விடுவது சிறந்ததாகுமேயல்லாமல் இப்பொழுதே உயிர்விடுவோமென்பத தக்கதாகாது என்று அனுமன் அவ் வானரர்களிடம் கூறினான். தோடலர் குழலி: அன்மொழித் தொகை. பாடவம்: பெருமை. 21 |