சடாயுவைக் கொன்றவர் யார் எனச் சம்பாதி வினவுதல் 4676. | நோக்கினன், நின்றனன், நுணங்கு கேள்வியான், வாக்கினால் ஒரு மொழி வழங்குறாதமுன், 'தாக்க அருஞ் சடாயுவைத் தருக்கினால் உயிர் நீக்கினர் யார்? அது நிரப்புவீர்!' என்றான். |
நோக்கினன் நின்றனன் - (சம்பாதியின் வருகையை) நோக்கி எதிர் நின்றவனும்; நுணங்கு கேள்வியான் - நுட்பமான கல்வி கேள்விகளையுடையவனுமாகிய அனுமன்; வாக்கினால் ஒரு மொழி - தன் வாயினால் ஒரு சொல்; வழங்குறாதமுன் - சொல்வதற்கு முன்னமே (சம்பாதி); தாக்க அருஞ் சடாயுவை - யாரும் எதிர்த்துப் போர் செய்ய முடியாத வலிமையிடைய சடாயுவை; தருக்கினால் - சூரத்தனத்தால்; உயிர் நீக்கினர் யார் - உயிரைப் போக்கியவர் யார்? அது நிரப்புவீர் - அதை விரிவாக எடுத்துக் கூறுங்கள்; என்றான் - என்று கேட்டுக் கொண்டான். நிரப்புவீர்: அனுமன் ஒருவனை உயர்வு கருதிப் பன்மையில் கூறியது என்றும், அங்கிருந்த மற்ற வானர வீரர்களை உளப்படுத்தியது என்றும் கொள்ளலாம். நிரப்புதல்: குறையின்றி முழுவதும் கூறல். 29 |