சம்பாதியின் வினாவும் அனுமனின் விடையும் 4686. | தேற்றத் தேறி இருந்த செங்கணான், 'கூற்று ஒப்பான், கொலை வாள் அரக்கனோடு ஏற்று, போர் செய்தது என் நிமித்து?' என, காற்றின் சேய் இது கட்டுரைக்குமால்; |
தேற்றத் தேறி இருந்த செங்கணான் - (அனுமன்) தேறுதல் மொழி கூறியதனால் மனந் தெளிந்த சிவந்த கண்களையுடைய அந்தச் சம்பாதி; கூற்று ஒப்பான் - யமன் போன்று வலிமையுடைய சடாயு; கொலை வாள் அரக்கனோடு - கொலை புரியும் வாளையுடைய அரக்கனாகிய இராவணனோடு; ஏற்று - எதிர் நின்று; போர் செய்தது - போர் செய்ததற்கு; என் நிமித்து என - காரணம் என்ன என்று வினாவ; காற்றின் சேய் - வாயு குமாரனான அனுமன்; இது கட்டுரைக்கும் - பின்வரும் செய்திகளைக் கூறலானான். ஆல்: ஈற்றசை. சம்பாதி அனுமன் தேறுதல்மொழியால் மனந் தெளிந்து, சடாயு இராவணனோடு போர் செய்த காணத்தை வினாவ, அனுமன் கூறமுற்பட்டான். நிமிர்ந்து: நிமித்தம் (காரணம்). செங்கணான்: கண்கள் சிவந்தமை துயரத்தால் கலங்கியதாலாகும். 39 |