4691. | 'பைந் தார் எங்கள் இராமன் பத்தினி, செந் தாள் வஞ்சி, திறத்து இறந்தவன், மைந்தா! எம்பி வரம்பு இல் சீர்த்தியோடு உய்ந்தான் அல்லது, உலந்தது உண்மையோ? |
மைந்தா - வீரமுள்ளவனே!பைந்தார் எங்கள் இராமன் - பசுமையான மலர்மாலயணிந்தவனான எங்கள் இராமனின்; பத்தினி - மனைவியும்; செந்தாள் வஞ்சி திறத்து - சிவந்த அடிகளையுடைய வஞ்சிக் கொடி போன்றவளுமான சீதையின் பொருட்டு; இறந்தவன் - உயிர் நீத்தவனாகிய; எம்பி - என் தம்பி சடாயு; வரம்பு இல் சீர்த்தியோடு - அளவில்லாத புகழோடு; உய்ந்தான் அல்லது - நல்வாழ்வு பெற்றான் என்று கூறாலாமேயல்லாமல்; உலந்தது - இறந்து போனான் என்பது; உண்மையோ- உண்மைப் பொருளாகுமோ? சீதையை மீட்பதற்குத் தன்னுயிரைக் கொடுத்தவனாதலால் அவனது பூதவுடம்பு அழிந்தும் புகழுடம்பு அழியாது நிலை நிற்கின்றது. ஆதலால், அவன் இறந்தும் இறவாதவனாகவே வாழ்ந்துவருகிறான் என்பது. பசுமை: புதுமை. செந்தாள் வஞ்சி: பண்புத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை; அடையடுத்த உவமையாகு பெயருமாம். 'தன்னுயிர் புகழ்க்கு விற்ற சடாயு' - (5305) 44 |