சம்பாதியின் முன்னைய வரலாற்றைக் கூறுமாறு வானரர் கேட்டல்

4698.தெருண்டான் மெய்ப் பெயர்
      செப்பலோடும், வந்து
உருண்டான் உற்ற
      பயத்தை உன்னினார்;
மருண்டார்; வானவர்
      கோனை வாழ்த்தினார்;
வெருண்டார்; சிந்தை
     வியந்து விம்முவார்.

     (அது கண்ட வானரர்கள்) தெருண்டான் மெய்ப் பெயர் -
(ஞானியர்களால் பரம் பொருள் என்று) தெளியப்பட்டவனாகிய இராமனது
பயன்தரும் திருநாமத்தை; செப்பலோடும் - (அந்த வானர வீரர்கள்) உச்சரித்த
அளவிலே; வந்து உருண்டான் - (முன்பு இறகு இல்லாமல்) உருண்டு
வந்தவனாகி சம்பாகி; உற்ற பயத்தை - (அப்போது) அடைந்த (சிறகுகள்
பெற்ற) நன்மையை; உன்னினார் - (மனத்தில்) கருதினர்; மருண்டார் -
வியப்பால் திகைப்புற்றனர்; வெருண்டார் - அச்சமுற்றனர்; வானவர் கோனை
வாழ்த்தினார் -
தேவர்களின் தலைவனான திருமாலின் அவதாரமாகிய
இராமபிரானை வாழ்த்தித் துதித்தார்கள்; சிந்தை வியந்து விம்முவார் -
ஆச்சரியத்தால் மனம் பூரித்தனர்.

     சம்பாதி இறகில்லாமல் உருண்டு வந்ததையும், இராம நாம உச்சரிப்பால்
சிறகுகள் தழைத்ததையும் நேரிலே கண்ட வானரர்கள் அச்சமும் வியப்பும்
மருட்சியும் ஒருங்கே கொண்டவர்களாய் அப் பெரும்பயனை விளைக்கும்
பெருமை வாய்ந்த இராமனை வாழ்த்தினர் என்பது. மெய்ப் பெயர்: தாரக
மந்திரம்.  பயன்: பயன் தனது திருநாமத்தால் வேண்டிய பயனை விளைத்தது
கொண்டு இராமன் மானுடனல்லன்; தேவாதி தேவனான 'முழுமுதற் கடவுளே'
என்ற ஞானத்தைப் பெற்ற வானரர்கள், அத் தேவனுடைய முற்றுணர்வு,
வரம்பிலாற்றல், யாவரையும் பாதுகாக்கும் திறம், அழியாவியல்பு முதலிய
குணங்களைக் கருதி அவற்றில் ஈடுபட்டு ஆழ்ந்து பக்தி வயப்பட்டுத்
தம்மையும் மறந்து, இத்திருமேனிக்கு எவ்வாற்றானும் ஒரு குறையும் வராதிருக்க
வேண்டும் என்று பரிவால் வாழ்த்துவாராயினர்.                       51