சம்பாதி தன் முன்னை வரலாறு உரைத்தல் அறுசீர் ஆசிரிய விருத்தம். 4700. | 'தாய் எனத் தகைய நண்பீர்! சம்பாதி, சடாயு, என்பேம்; சேயொளிச் சிறைய வேகக் கழுகினுக்கு அரசு செய்வேம்; பாய் திரைப் பரவை ஞாலம் படர் இருள் பருகும் பண்பின் ஆய் கதிர்க் கடவுள் தேர்ஊர் அருணனுக்கு அமைந்த மைந்தர்; |
தாய் எனத்தகைய நண்பீர் - அன்பு காட்டுவதில் தாய் என்று சொல்லத்தக்க நண்பர்களே!பாய்திரைப் பரவை ஞாலம் - வீசும் அலைகளையுடைய கடலால் சூழப் பெற்ற நிலவுலகத்தில்; படல் இருள் பருகும் பண்பின் - பரவிய இருட்டை விழுங்கும் (போக்கும்) தன்மையுடைய; ஆய் கதிர்க் கடவுள் - சிறந்த கதிர்களோடு கூடிய சூரிய தேவனது; தேர் ஊர் - தேரைச் செலுத்தும் சாரதியான; அருணனுக்கு - அருணனுக்கு; அமைந்த மைந்தர் - பிறந்த மக்களாகிய; சம்பாதி சடாயு என்பேம் - சம்பாதி சடாயு என்ற நாங்கள் இருவரும்; சேய் ஒளிச்சிறைய - அழகிய நிறத்தைக் கொண்ட சிறகுகளையுடை; வேகக் கழுகினுக்கு - வேகமாகப் பறக்கும் கழுகுகளுக்கு; அரசு செய்வேம் - அரசராக இருந்து ஆட்சி செய்தவர்கள். கதிரவனின் சாரதியாகிய அருணனுக்கு மக்களாகப் பிறந்த சம்பாதி சடாயு என்ற நாங்கள் வானத்தில் உயரப் பறக்கும் இயல்புடைய கழுகுகளுக் கெல்லாம் அரசராக விருந்தோம் என்று சம்பாதி கூறினான் என்பது. அருணன்: சூரியனுக்குச் சாரதி; காசியப முனிவன் மனைவியான விநதையின் வயிற்றில் பிறந்தவன்; கருடனுக்குத் தமையன்; இடைக்குக் கீழே உறுப்பில்லாதவன். இச்செய்யுள் முதல் 4706 ஆம் செய்யுள் முடிய உள்ள ஏழு பாடல்களை ஐந்து சீர் கொண்டவையாகப் பிரித்துக் கலித்துறை என்றும் கொள்வர். நண்பீர்: ஈர் - முன்னிலைப் பன்மை விகுதி. 53 |