4706.'பாகு ஒன்று குதலையாளைப்
      பாதக அரக்கன் பற்றிப்
போகின்ற பொழுது கண்டேன்;
      புக்கனன் இலங்கை; புக்கு,
வேகின்ற உள்ளத்தாளை வெஞ்
      சிறையகத்து வைத்தான்;
ஏகுமின் காண்டிர்; ஆங்கே
      இருந்தனள் இறைவி, இன்னும்.

     பாகு ஒன்று குதலையாளை - சர்க்கரைப் பாகு போன்ற மழலைச்
சொற்களையுடைய சீதையை; பாதக அரக்கன் - கொடிய அரக்கனான
இராவணன்; பற்றிப் போகின்றபொழுது - கவர்ந்து செல்லுகின்ற போது;
கண்டேன் -
(நான்) பார்த்தேன்; இலங்கை புக்கனன் - (அவன்)
இலங்கையிற் போய்ச் சேர்ந்தான்; புக்கு - (அங்குச்) சென்று ;
வேகின்ற உள்ளத்தாளை -
தவிக்கின்ற மனமுடைய அந்தச்
சீதையை; வெஞ்சிறை யகத்து வைத்தான் - கொடிய சிறைக் காவலில்
வைத்துவிட்டான்; இறைவி - தலைவியான சீதை; இன்னும் ஆங்கே
இருந்தனள் -
இப்பொழுதும் அங்கேதான் இருக்கின்றாள்; ஏகுமின்
காண்டிர்-
(நீங்கள்) அங்கே சென்று காணுங்கள்.

     ஏகுமின் - முற்றெச்சம்.                                      59