4708. | 'நான்முகத்து ஒருவன், மற்றை நாரி ஓர் பாகத்து அண்ணல், பால்முகப் பரவைப் பள்ளிப் பரம்பரன், பணி என்றாலும், காலனுக்கேயும், சேறல் அரிது; இது காவல் தன்மை; மேல் உமக்கு உறுவது எண்ணிச் செல்லுமின்; - விளிவு இல் நாளீர்! |
நான்முகத்து ஒருவன் - (நான்கு திசைகளையும் நோக்க) நான்கு முகங்களைக் கொண்ட பிரமதேவன்; மற்றை நாரி ஓர் பாகத்து அண்ணல் - மற்றொரு மூர்த்தியான பார்வதியை இடப்பாகத்திற் கொண்ட சிவன்; பால்முகப் பரவை - பாலைத் தன்னிடங் கொண்டுள்ள திருப்பாற் கடலில்; பள்ளிப் பரம்பரன் பணி என்றாலும் - பாம்புப் படுக்கையில் பள்ளி கொண்டுள்ள சிறந்த திருமால் ஆகியோரின் பொருட்டுச் செய்யும் வேலையை யாயினும்; காலனுக்கேயும் - (அவ்வளவு ஏன்) யமனுங் கூட; சேறல் அரிது - (அந்தப் பணியை நிறைவேற்றிட) உள்ளே புகுந்து செல்லுதல் என்பது முடியாததாகும்; இது காவல் தன்மை - (ஏனெனில்) இது (இலங்கையின்) கட்டுக் காவல் தன்மையாகும்; விளிவு இல் நாளீர் - அழிவில்லாத நீண்ட ஆயுட் காலத்தையுடையவர்களே!மேல் உமக்கு உறுவது - இனிமேல், உங்களுக்கு நேரக் கூடியவற்றை; எண்ணிச் செல்லுமின் - முன்னரே ஆராய்ந்து பார்த்துச் செல்லுங்கள். மும்மூர்த்திகளின் பொருட்டுச் செய்யும் பணியாக இருப்பினும் அதனைச் செய்து முடிப்பதற்காக இலங்கைக்குள் புகுவது இயமனுக்குக் கூட முடியாது. ஆகவே, இது பற்றி முன்னரே ஆராய்ந்து முடிவெடுத்துத் தக்கவாறு செய்யுங்கள் என்றான் சம்பாதி. 61 |