கடலைக் கடப்போர் யாரென வானரர் தமக்குள் பேசிக் கொள்ளுதல் கலித்துறை 4711. | 'பொய் உரைசெய்யான், புள்அரசு' என்றே புகலுற்றார், 'கை உறை நெல்லித் தன்மையின் எல்லாம் கரை கண்டாம்; உய் உரை பெற்றாம்; நல்லவை எல்லாம் உற எண்ணிச் செய்யுமின் ஒன்றோ, செய் வகை நொய்தின் செய வல்லீர்! |
புள் அரசு - கழுகுகளுக்கு அரசனான சம்பாதி; பொய் உரை செய்யான் என்றே - பொய் சொல்லமாட்டான் என்று உறுதியாக நினைத்து; புகலுற்றார் - சொல்லத் தொடங்கியவர்களாகி; செய்வகை நொய்தின் செயவல்லீர்!- செய்ய வேண்டியவற்றை எளிதாகச் செய்து முடிக்க வல்லவர்களே!கை உறை நெல்லத் தன்மையின் - உள்ளங் கையில் பொருந்திய நெல்லிக் கனியின் தன்மை போல; எல்லாம் கரை கண்டாம் - (சீதை இருக்குமிடம் முதலிய செய்திகள்) முழுவதையும் நன்றாக அறிந்தோம் (ஆகவே); உய் உரை பெற்றாம் - (அச் சம்பாதியால்) நாம் வாழ்வதற்குரிய உறுதிமொழிகளையும் அடைந்தோம்; (ஆகவே) நல்லவை எல்லாம் - நன்மை தரக்கூடிய எல்லாவற்றையும்; உற எண்ணி - தக்கவாறு ஆராய்ந்து; ஒன்று செய்யுமின் - (இரண்டில் ஏதேனும்) ஒன்றைச் செய்யுங்கள். சம்பாதி கூறியவை உண்மையேயாதலால் அவனது சொற்படி ஏதேனும் ஒன்றைச் செய்தலே நன்மையாகும்; நாம் சென்று தேடாமலே சம்பாதி சொன்னதை நம்பி மீண்டும் இராமசுக்கிரீவரையடைந்து சீதை இலங்கையிலிருந்து முதலியவற்றை எடுத்துச் சொன்னாலும் நமது கடமை முடிவுபெறும். இனி, நாம் கடலைக் கடந்து இலங்கை புகுந்து சீதையைக் கண்ணிலே கண்டு வந்து செய்தி தெரிவிக்கலாமென்றால் அது முன்கூறிய அதனைக் காட்டிலும் சிறந்ததேயாம்; ஆனால், அவ்வாறு செய்யக் கடலைக் கடக்கவேண்டுமே! அப்படிக் கடலைக் கடந்து சென்று மீளும் வல்லமையுள்ளவர் யாவர் என்று வானரவீரர் ஆராந்தனர் என்பது. கையுறை நெல்லிக்கனி: மேல் தோற்றத்தைக் கொண்டு உள் விவரம், முழுவதையும் தெளிவாக அறிவதில் உவமம். நெல்லியின் உருவம், கொட்டை, வரைகள், சதைப் பற்று முதலியன தெளிவாய்த் தோற்றுவிப்பன. சீதையைப் பற்றிய செய்தி எதுவும் தமக்குத் தெரியாமையாலும், தவணை கடந்தமையாலும், இனி மீண்டு சென்று அரசனது கோபத்திற்கு இலக்காவதைவிட உயிரை விடுதலே நல்லது' என்று தாம் இறப்பதற்குத் துணிந்த நிலையில், எதிரேவந்து சம்பாதி தெளிவுண்டாக்கியதால் 'உய்யுரை பெற்றாம்' என்றார். புள்ளரசு பொதுவாகக் கருடாழ்வானைக் குறிப்பது: இங்கே கழுகரசன் என்னும் பொருளது. 1 |