அனுமனே தக்கவன் எனச் சாம்பவன் உரைத்தல் 4717. | 'யாம் இனி இப்போது ஆர் இடர் துய்த்து, இங்கு, ''இனி யாரைப் போம் என வைப்பேன்'' என்பது புன்மை; புகழ் அன்றே; கோ முதல்வர்க்கு ஏறு ஆகிய கொற்றக் குமரா! நம் நாமம் நிறுத்திப் பேர் இசை வைக்கும் நவை இல்லோன். * |
கோ முதல்வர்க்கு ஏறு ஆகிய - வானரத் தலைவர்களில் சிங்கம் போன்ற; கொற்றக் குமரா - வெற்றிமிக்க அங்கதனே!யாம்இனி இப்போது- இனி (நாம்) இப்பொழுது; ஆர் இடர் துய்த்து - பெருந் துன்பத்தில் வருத்திக் கொண்டு; இங்கு - இங்கிருந்து - இனி யாரை -வேறு யாரைத்தான்; போம் என வைப்பேம் - கடல் கடந்து போய் வருவீர் என்று வேண்டிக் கொள்வோம்?என்பது புன்மை - என்று இவ்வாறு நினைப்பது இழிவாகும்; புகழ் அன்றே - புகழ்வதற்கு உரியதன்று; (ஆதலால்) நம் நாம் நிறுத்தி - நம் பெயரை நிலை நாட்டி; பேர் இசை வைக்கும் - பெரும்புகழை (நமக்கு) உண்டாக்கவல்ல; நவை இல்லோன் - குற்றமற்றவன்; (அனுமனேயாவான்). பெருங்கூட்டமாகத் திரண்டுள்ள நமக்குள் கடல் கடக்கும் வல்லமையுள்ளவர் யாவருமில்லை; ஆதலால், வேறு யாரைக் கடலைக் கடக்குமாறு வேண்டிக் கொள்வது? ஒருவரைத் தேடிப் பெற்றோமென்றாலும், அது நமக்கும் பெரும் பழியாகுமல்லவோ? முதலில் இராம சுக்கிரீவர்களுக்கு நட்பையுண்டாக்கிய இந்த அனுமன் எடுத்த செயலைச் சோர்வில்லாமல் முடிக்கும் திறமுடையவனாதலால் அவனே கடல் கடந்து திரும்பிவந்து நமக்குப் புகழை நிலைநாட்டுவதற்கு உரியவனென்று கூறி, முனிவன் சாபத்தால் தன் வலிமை தனக்குத் தெரியாது சேர்ந்துள்ள அனுமனுக்கு உற்சாகமுண்டாகுமாறு அவனது வல்லமையைத் தெரிவித்தான் சாம்பவான் என்பது. இச்செய்யுளும் (7) அடுத்த செய்யுளும் (8) குளமாக இயைந்து வினைமுடிவு கொள்ளும். அயன் மைந்தன் என்ற எழுவாய் அடுத்த செய்யுளிலிருந்து கொள்ளப்பெற்றது. 7 |