4733.'   ''நீயீரே நினைவின் முன்னம், நெடுந்
      திரைப் பரவை ஏழும்
தாய், உலகு அனைத்தும் வென்று,
     தையலைத் தருதற்கு ஒத்தீர்;
போய், இது புரிது!'' என்று புலமை
      தீர் புன்மை காண்டற்கு
ஏயினீர் என்னின், என்னின்
      பிறந்தவர் யாவர்? இன்னும்.

     நீயீரே - நீங்கள்; நினைவின் முன்னம் - நினைப்பதற்குமுன்பே (மிக
விரைவில்); நெடுந்திரை பரவை ஏழும் தாய் - பெரிய அலை களையுடைய
ஏழு கடல்களையும் தாண்டி; உலகு அனைத்தும் வென்று -
எல்லாவுலகங்களையும் வெற்றிகண்டு; தையலைத் தருதற்கு ஒத்தீர் -
சீதையை மீட்டுக் கொண்டு வருவதற்கு வல்லமையுடையீர் ஆவீர்கள்; போய்
இது புரிதி என்று -
(அவ்வாறான ஆற்றல் பெற்ற நீங்களே நீ) சென்று
இதைச் செய் என்று; புலமை தீர் புன்மை காண்டற்கு - அறிவற்ற எனது
தாழ்வினைக் காண்பதற்காக; ஏயினீர் என்னின் - (என்னை இச் செயலில்)
ஏவினீர் எனினும்; என்னின் பிறந்தவர் இன்னும் யாவர் - என்னைப்
போலப் பிறந்த பயனையடைந்தவர் வேறு யார் உள்ளார்? (ஒருவரு மில்லை;
யானே பிறந்த பயனைப் பெற்றேன் என்பது).

     இந்தச் சிறிய ஒரு கடலையேயல்லாமல் ஏழு கடல்களையும் வெல்ல
வேண்டும் மென்றாலும் அவ்வாறே செய்து சீதையை மீட்கும்
வல்லமையுடையவர் நீரென்று மற்ற வானரர்களது வலிமை மிகுதியை முதல்
மூன்றடிகளால் தெரிவித்தான் அனுமன் என்பது.

     'ஏயினீரென்னின் என்னிற் பிறந்தவர் யாவரின்னும்' - மிக்க
வலியவர்களாய்க் கடல்கடந்து மீண்டு வரும் வல்லமையுள்ளார் பலரிருக்கவும்
என்னை ஏவினது எனது பேறென்று பணிவு புலப்படுத்தியவாறு. சாம்பவானே
சீதையைத் தேடிக் கண்டுவரும் ஆற்றல் உடையவன் என்பது, தன்னை
ஏவியதால் தன் அறிவின் குறைவு இத்தன்மையது என்பதை அறிந்து
கொள்ளும் வாய்ப்பு தனக்கு ஏற்பட்டது என்பதும் அனுமன் கருத்து.     23