அனுமன் மயேந்திர மலையின் உச்சிக்குச் செல்லுதல் 4735. | 'ஈண்டு இனிது உறைமின், யானே எறி கடல் இலங்கை எய்தி, மீண்டு இவண் வருதல்காறும்; விடை தம்மின், விரைவின்' என்னா ஆண்டு அவர் உவந்து வாழ்த்த, அலர் மழை அமரர் தூவ, சேண் தொடர் சிமயத் தெய்வ மயேந்திரத்து உம்பர்ச் சென்றான். |
யான் - நான்; எறி கடல் இலங்கை எய்தி - அலைவீசும் கடலால் சூழப் பெற்ற இலங்கை நகரையடைந்து; மீண்டு இவண் வருதல் காறும் - இங்கே திரும்பி வருகின்ற வரையிலும்; ஈண்டு இனிது உறைமின் - (நீங்கள்) இந்த இடத்தில் தங்கியிருங்கள்; விரைவின் விடை தம்மின் - (எனக்கு விரைவிலே விடை கொடுங்கள்; என்னா - என்று சொல்லி; (அனுமன்); ஆண்டு அவர் உவந்து வாழ்த்த - அப்பொழுது அந்த வானர வீரர்கள் மகிழ்ந்து வாழ்த்துக் கூறவும்; அமரர் அலர் மழை தூவ - தேவர்கள் பூமாரி பொழியவும்; சேண் தொடர் சிமயத் தெய்வ மயேந்திரத்து - வானத்தையளாவிய சிகரங்களையுடைய தெய்வத் தன்மையுள்ள மகேந்திரமலையினது; உம்பர்ச் சென்றான் - உச்சிக்குப் போய்ச் சேர்ந்தான். உறைமின், தம்மின்: முன்னிலைப் பன்மை வினை முற்றுக்கள். 25 |