4783. | ஆன்று ஆழ்நெடு நீரிடை, ஆதியொடு அந்தம்ஆகித் தோன்றாதுநின்றான் அருள் தோன்றிட, முந்துதோன்றி, மூன்றுஆம்உலகத்தொடும், முற்றுஉயிர் ஆயமற்றும், ஈன்றானை ஈன்றசுவணத் தனி அண்டம்என்ன,* |
ஆதியொடு அந்தம்ஆகித் தோன்றாது நின்றான் - ஆதியும் முடிவும் ஆகி வெளிப்படையாகத் தெரியாது நிலைத்து நிற்கும் பரம்பொருளின்; அருள்தோன்றிட - திருவருள் வெளிப்பட (அதனால்); ஆன்றுஆழ் நெடு நீரிடை - அமர்ந்து ஆழமான கடலின்கண்ணே; முந்து தோன்றி - முதலில் வெளிப்பட்டு; மூன்றுஆம் உலகத் தொடும் - மூன்று ஆகிய உலகங்களையும்; முற்று உயிர் ஆய மற்றும் - ஆன்மாவுடன் கூடிய மற்றவற்றையும்; ஈன்றானை ஈன்ற - பெற்றெடுத்த பிரம்ம தேவனை வெளிப்படுத்திய; தனி சுவண அண்டம் என்ன - ஒப்பற்ற பொன் முட்டையைப் போல. உலகங்களைப்படைக்கத் திருவுள்ளம் பற்றிய பரம்பொருள் பிரம தேவனைத் தனக்குள் அடக்கிய பொன் முட்டையைக் கடலில் படைத்தான். அந்தமுட்டைபோல மைந்நாகமலை இருந்தது. இறைவன் புனலில்வித்திய வித்து, பொன் முட்டையாக வடிவம் கொண்டது. அதிலிருந்து பிரமன் வெளிப்பட்டான். சுவணம் (சுவர்ணம்) - பொன். அண்டம் முட்டை. (43) |