அனுமன்துறக்க நாட்டை இலங்கை என்று ஐயுற்றுத் தெளிதல் அறுசீர்விருத்தம் 4741. | ஆண்தகைஆண்டுஅவ் வானோர் துறக்க நாடுஅருகில் கண்டான்; 'ஈண்டு,இதுதான்கொல் வேலை இலங்கை?' என்று ஐயம் எய்தா, வேண்டு அருவிண்ணாடு என்னும் மெய்ம்மைகண்டு, உள்ளம் மீட்டான் 'காண்தகுகொள்கை உம்பர் இல்'என,கருத்துள் கொண்டான். |
ஆண்தகை- ஆண்மையிற் சிறந்த அனுமன்; ஆண்டு - அங்கே; அவ்வானோர் - அந்தத் தேவர்களின்; துறக்க நாடு - சுவர்க்க லோகத்தை; அருகில் கண்டான் - பக்கத்தில் பார்த்தான்; (பார்த்த அனுமன்) ஈண்டு - இங்கே தெரிகின்ற; இது - இந்த உலகம்; வேலை இலங்கை - கடலால் சூழப்பட்ட இலங்கையோ; என்று ஐயம் எய்தா - என்று சந்தேகம் அடைந்து; வேண்டு அரும் - யாவரும் விரும்புகின்ற, அரிய; விண்ணாடு என்னும் - தேவநாடு என்கின்ற; மெய்ம்மை கண்டு - உண்மையைத் தெரிந்து; உள்ளம் மீட்டான் - (அங்கே தேடும்) எண்ணத்தை விலக்கி; காண்தகு கொள்கை - தேடிக் காண வேண்டிய கோட்பாடாகிய பிராட்டி; உம்பர் இல் என - விண்ணுலகில் இல்லை என்று; கருத்துள் கொண்டான் - மனத்தில் நினைத்துக்கொண்டான். ஆண்தகை -புலனடக்கம் பெற்றவன். 'காண்டகு தோகை' என்று பாடம் கொண்டு காணவேண்டிய பிராட்டி என்று உரைகூறுதல் உண்டு. "விண்நாடு வேண்டு அரு நாடு" என்றதால், இலங்கை பிறர் வெறுக்கும் நாடு என அறிக. மீட்டான் - மீட்டு, முற்றெச்சம். இல் - இல்லை. (விளம்-மா-மா-விளம்-மா-மா) என்னும் சீர்களை முறையே பெற்றுவரும் அறுசீர் விருத்தம், இராம காதையில் இத்தகைய விருத்தங்கள் 2536 பாடல்கள் உள்ளன என்று அமரர் கம்பனடிப்பொடி அவர்கள் வரைந்துள்ளார் (கம்பன் மணிமலர் 1976) (1) |