4744.

புகல்அரும் முழையுள் துஞ்சும்
     பொங்கு உளைச் சீயம்பொங்கி,
உகல்அருங் குருதிகக்கி,
     உள்ளுறநெரிந்த; ஊழின்,
அகல் இரும் பரவைநாண
     அரற்றுறுகுரல ஆகி,
பகல்ஒளி கரப்ப,வானை
     மறைத்தன,பறவை எல்லாம்.
 

     புகல் அரும்- நுழையமுடியாத; முழையுள் துஞ்சும் - குகையின்கண்
உறங்கின்ற; பொங்கு உளைச்சீயம் - சிலிர்க்கின்ற பிடரி மயிரையுடைய
சிங்கங்கள்; பொங்கி - கொந்தளித்து; உகல் அருங் குருதி கக்கி - சிந்தக்
கூடாத இரத்தத்தை வெளிப்படுத்தி; உள்ளுற நெரிந்த - உள்ளே சிதைந்தன;
பறவை எல்லாம் - எல்லாப் பறவைகளும்; அகல் இரும் ஊழின்
பரவைநாண
- பரந்த பெரிய ஊழிக்காலத்துக் கடல்கள் வெட்கம் அடைய;
அரற்றுறு குரல ஆகி - கதறுகின்ற கூக்குரலை உடையனவாய்; பகல் ஒளி
கரப்ப
- சூரியனுடைய பிரகாசம் மறையும்படி; வானை மறைத்தன -
ஆகாயத்தை மூடின.

    அனுமன் திருவடிபடஅழுந்திய மலைக்குகைக்குள் சிங்கங்கள் குருதி
கக்கி நெரிந்தன. பறவைகள் வானை மறைத்தன. நெரிதல் - சிதைதல்,
நொறுங்குதல். வாளரக்கன் தலை பத்தும் நெரித்தவன் (நாவரசர் - மன்னு
மலைமகள் 10)                                            (4)