4746. | பொன்பிறழ் சிமயக் கோடு பொடியுற,பொறியும் சிந்த, மின்பிறழ்குடுமிக் குன்றம் வெரிந்உறவிரியும் வேலை, புன் புற மயிரும்பூவா, கண்புலம்புறத்து நாறா, வன்பறழ் வாயில்கவ்வி, வல்லியம்இரிந்த மாதோ. |
மின்பிறழ்குடுமிக் குன்றம் - ஒளி விளங்கும்தலைமையுடைய மகேந்திர மலையின்; வெரிந் - முதுகின்கண்; பொன்பிறழ் சிமயக்கோடு - பொன்போலப் பொலிவு பெற்ற சிகரமானது; உற - நன்றாக அழுந்த (அதனால்); பொடியுறப் பொறி சிந்த - பொடிப் பொடியாகிப் பொறி பறக்க; விரியும் வேலை - பிளவுபடும் சமயத்தில்; வல்லியம் - புலிகள்; புன்புற மயிரும் பூவா - மெல்லிய உடம்பில் பூனை மயிரும் முளைக்காத; புறத்துக் கட்புலம் நாறா - வெளியில் தோன்றும்படி கண்கள் திறவாத; வன்பறழ் - (தம்முடைய) வலிமையான குட்டிகளை; வாயில் கவ்வி இரிந்த - வாயில் பற்றிஅஞ்சியோடின. சிகரம்பொடியாகி மலை பிளந்தது என்றும் கூறலாம். கோடு அழுந்தக் குன்றம் பிளந்தது என்று இங்கே கொள்ளப் பட்டது. சிமயம் - சிகரம் - இமையவர் உறையும் சிமையப் பிடர்த்தலை (சிலம்பு 5-97) கோடு - சிகரத்தின் நுனி. பொற்கோட்டு இமயமும் பொதியமும் போன்றே (புறம் 2). உடலில் தோன்றும் புல்லிய மயிரைப் பூனைமயிர் என்பர். சங்க இலக்கியம் அரிமயிர் என்று பேசும். பறழ் - குட்டி, நாய், புலி முதலான விலங்குகளின் குட்டியைப் பறழ் என்பது மரபு. புலிப்பறழ் அன்ன பூஞ்சினை வேங்கை (மரபியல் மேற்கோள்) மலைக்கு முதுகு கூறப்பெற்றுள்ளது. (6)
|