4747.தேக்குஉறுசிகரக் குன்றம்
     திரிந்துமெய்ந் நெரிந்து சிந்தத்
தூக்குறு தோலர்,வாளர்,
    துரிதத்தின் எழுந்த தோற்றம்,
தாக்குறுசெருவில், நேர்ந்தார்
     தாள்அறவீச, தாவி,
மேக்குறவிசைத்தார் என்னப்
     பொலிந்தனர்-விஞ்சை வேந்தர்.

தேக்கு உறுசிகரக் குன்றம்- தேக்கு மரங்கள் மிகுதியாகப் பெற்ற
மகேந்திர மலை; திரிந்து - தன் இயல்பு வேறுபட்டு; மெய்ந் நெரிந்து சிந்த -உடல் சிதைந்து சிதற (அதனால்); விஞ்சை வேந்தர் - வித்தியாதரத்
தலைவர்கள்; தூக்குறு தோலர் - உயர்த்திப் பற்றிய கேடகமுடையவராய்;
வாளர் - வாளை ஏந்தியவராய்; துரிதத்தின் எழுந்த தோற்றம் - வேகமாக
எழுந்த காட்சி; தாக்குறு செருவில் - மோதிச் செய்கின்ற போரில்;
நேர்ந்தார்தாள்அற வீச
- எதிர்த்த பகைவர்களின் முயற்சியற்றுப் போக
ஆயுதங்களைச்சுழற்ற; மேக்கு உறத் தாவி - வானிலே நன்றாகப் பாய்ந்து;
விசைத்தார்என்னப் பொலிந்தனர் - வேகம் பெற்றவர்களைப் போல
விளங்கினார்கள்.

     சலிப்பற்றதுமலை. அஃது இன்று சலித்தது. நிலை திரிந்தது. சுழன்றது;
அதனால் அங்குள்ள வித்தியாதரத் தலைவர்கள் ஏந்திய கேடகத்தோடும்
தாங்கிய வாளோடும் விண்ணில் சென்றனர். அக் காட்சி பகைவரைத் தாக்க
எழுந்தது போல் இருந்தது. பகைவரால் தாக்கப்பெற்று மேல் எழுந்த வீரர்
என்றும் பொருள் கொள்ளலாம்.                             (7)