4748. | தாரகை,சுடர்கள், மேகம் என்று இவைதவிரத் தாழ்ந்து, பாரிடை அழுந்துகின்ற படர்நெடும்பனிமாக் குன்றம், கூர் உகிர்க்குவவுத் தோளான் கூம்புஎனக்குமிழி பொங்க ஆர் கலி அழுவத்துஆழும் கலம் எனல்ஆயிற்று அன்றே. |
தாரகை சுடர்கள்மேகம் என்று இவை- நட்சத்திரம், சூரிய சந்திரர்கள்; மேகம் என்னும் இப்பொருள்கள்; தவிர - (சார்ந்து வராமல்) நீங்கிநிற்க; தாழ்ந்து - இறங்கி; பாரிடை அழுந்துகின்ற - பூமியின்கண் கீழ்நோக்கிப் போகும்; படர்நெடும் பனிமாக் குன்றம் - விரிந்து நீண்ட குளி்ர்ந்த மலை; கூர்உகிர் குவவுத் தோளான் - கூர்மையான நகங்களையும் திரண்ட தோள்களையும் உடைய அனுமன்; கூம்புஎன - பாய்மரம் போலிருக்க; ஆர்கலி அழுவத்து - கடலின் ஆழத்திலே; குமிழி பொங்க -நீர்க்குமிழிகள் கொந்தளிக்க; ஆழும் கலம் எனல்ஆயிற்று -மூழ்குகினற் கப்பல் என்று கூறும் தன்மையைப் பெற்றது. அனுமன் கப்பலின்பாய்மரம் போன்றிருந்தான். அழுந்தும் மலை கடலுள் ஆழும்கப்பல் போன்றிருந்தது. கூம்பு - பாய்மரம். வங்கத்தின் கூம்பேறும் மாப்பறவை போன்றேனே (குலசேகரர் 5-5). கப்பலையும் மலையையும் ஒப்பிடுதலைக் குறுந்தொகையில் காண்கிறோம். 'வாழி தோழி தெண்டிரைக் கடல் ஆழ் கலத்தில் தோன்றி - மாலை மறையும் அவர் மணி நெடுங் குன்றே (குறு 240) அழுவம் - ஆழம் பரப்பும் ஆம். (8) |