4749.

தாதுஉகுநறுமென் சாந்தம்,
     குங்குமம்,குலிகம், தண்தேன்,
போதுஉகுபொலன்தாது, என்று இத்
    தொடக்கத்த யாவும் பூசி,
மீதுஉறு சுனைநீர்ஆடி,
     அருவிபோய் உலகின் வீழ்வ,
ஓதிய குன்றம்கீண்டு
    குருதிநீர்சொரிந்தால் ஒத்த.

     அருவி - மகேந்திரமலையின் அருவி; தாது - காவிக் கற்களையும்;
உகுநறுமென் சாந்தம் - கரைந்து தேய்ந்த நறுமணம் வீசும் சந்தனக்
குழம்பையும்; குங்குமம் - குங்குமப் பூக்களையும்; குலிகம் -
சாதிலிங்கத்தையும்; தண்தேன் -  குளிர்ந்த ; போதுஉகு - மலர்கள்சிந்திய;
பொலன்தாது - பொன் நிறம் பெற்ற மகரந்தங்களையும்; என்று இத்
தொடக்கத்த யாவும் -
இது முதலான பல பொருள்களையும்; பூசி -
தன்மேல் பூசிக் கொண்டு; மீதுறு - மலையின் மேலே உள்ள; சுனை நீர்அடி
-
சுனை நீரிலே குளித்து; உலகின் போய் வீழ்வ - பூமியில் பரந்து வீழும்
காட்சி; ஓதிய குன்றம் - பேசப்பெற்ற மலை; கீண்டு - வயிறு பிளக்கப்
பெற்று; குருதி நீர் சொரிந்தால் ஒத்த - இரத்தமாகிய நீரைச் சொரிவதைப்
போன்றிருந்தன.

     மணமுள்ளபொருள்களைப் பூசி நீராடுவார் போல அருவி, மகரந்தம்
முதலானவற்றைப் பூசிச் சுனையில் நீராடின. அது, நிலத்தில் பாயும்போது மலை
பிளந்து குருதி வீழ்வது போன்றிருந்தது. உகும் - கரைந்து தேயும். உப்பு இயல்
பாவை உறை உற்றதுபோல் உக்கு விடும், என் உயிர் என்னும் கலிப்பாவுக்கு
(நெய்தல் 21-16-17) உரை வகுத்த நச்சினார்க்கினியர்,'உயிர்.... கரைந்து விடா
நின்றது' என்று உரை வகுத்தார். குலிகம் - சாதிலிங்கம். குன்றுக்குக் குருதி
குறிக்கப் பெறுகிறது.
                                       (9)