4750. 

'கடல்உறுமத்துஇது' என்னக்
     கருவரை திரியும் காலை,
மிடல்உறுபுலன்கள் வென்ற
    மெய்த்தவர் விசும்பின் உற்றார்;
திடல்உறுகிரியில் தம்தம்
     செய்வினைமுற்றி, முற்றா
உடல்உறு பாசம்வீசாது,
     உம்பர்செல்வாரை ஒத்தார்.

     கருவரை - கரிய மகேந்திரமலை; கடல்உறு - பாற் கடலைச் சார்ந்த;
மத்து இது என்ன -
மத்து என்று கூறும்படி; திரியும் காலை - சுழல்கின்ற
சமயத்தில்; மிடல்உறு - வன்மை மிக்க; புலன்கள் வென்ற மெய்த்தவர் -
ஐம்புலன்களும் பொறிவழியே போகாமல் அடக்கிய முனிவர்கள்; விசும்பின்
உற்றார் -
ஆகாயத்தை அடைந்தார்கள் (அவர்கள்); திடல்உறு கிரியில் -
மேட்டுப் பாங்கான மலையில்; தம்தம் செய்வினை முற்றி முற்றா - தாம்
தாம் செய்யவேண்டிய கடமைகளைத் தொடங்கி நிறைவு செய்யாமல்;
உடல்உறு பாசம் வீசாது -
உடலின்கண் கொண்ட பற்றை விடாமல்; உம்பர்
செல்வாரை, ஒத்தார் -
விண்ணுலகத்திற்குச் செல்பவரை ஒத்தார்.

     முனிவர்கள்ஆகாயத்தை அடைந்தது பற்றை விடாமையால் சுவர்க்கம்
அடைந்தவரை ஒத்தனர். திரிதல் - சுழல்தல். மண்ணகந்திரிய... மால்வரை
திரிய காலும் கதிரொடு திரிய (3517). செய்ய வேண்டியவற்றை
நிறைவேற்றியிருந்தால் முத்தி பெற்றிருப்பர். நிறைவேற்றாமையால் அவர்கள்
சுவர்க்கம் சென்றனர். (கீதை - தியான யோகம் 40)                (10)