4760.

கீண்டதுவேலை நல்நீர்;
     கீழ்உறக்கிடந்த நாகர்
வேண்டிய உலகம்எல்லாம்
     வெளிப்பட,மணிகள் மின்ன,
ஆண்தகை அதனைநோக்கி,
    'அரவினுக்குஅரசன் வாழ்வும்
காண்தகுதவத்தென் ஆனேன்
    யான் !' எனக் கருத்துள் கொண்டான்.

     நல்நீர் வேலைகீண்டது - மிக்க நீரையுடைய கடல்பிளவுபட்டு;
உறக்கீழ் கிடந்த -
மிகவும் கீழான இடத்தே அமைந்துள்ள; நாகர் -
நாகலோகத்தவர்கள்; வேண்டிய உலகம் எல்லாம் - விரும்புகின்ற உலகம்
முழுவதும்; வெளிப்பட - வெளிப்பட்டுத் தெரிய (அதனால்); மணிகள்
மின்ன-
மாணிக்கங்கள் ஒளிவீச; ஆண்தகை அதனை நோக்கி -
 ஆண்மை மிக்கஅனுமன் அதைப் பார்த்து; அரவினுக்கு அரசன் வாழ்வும்
-
பாம்புகளின்வேந்தனான ஆதிசேடனின் செல்வச் செழிப்பையும்; யான்
காண்தகுதவத்தென் ஆனேன் -
நான் பார்க்கும் தவத்தைச் செய்தவனாய்
விட்டேன்;எனக் கருத்துள் கொண்டான் - என்று உள்ளத்தே
எண்ணினான்.

     மணிகள்,செல்வச் செழிப்பைக் காட்டிற்று. கடல் உப்பு நீர் உடைத்து
ஆதலின் நல்நீர் என்னும் சொல் மிகுதிப் பண்பை உணர்த்திற்று. நல்ல பாம்பு,
நல்ல வெயில் என்றாற்போல. மகாவித்துவான் வி. கோவிந்தப் பிள்ளை
கடலின் நல்ல ஸ்வபாவம் என்று வரைந்தார்.                      (20)