4762.

துள்ளிய மகர மீன்கள்
    துடிப்பு அற,சுறவு தூங்க,
ஒள்ளிய பனைமீன்துஞ்சும்
     திவலைய,ஊழிக்காலின்
வள்உகிர் வீரன்செல்லும்
     விசைபொரமறுகி, வாரி,
தள்ளிய திரைகள்முந்துற்று,
     இலங்கைமேல்தவழ்ந்த  மாதோ.
 

     துள்ளிய மகரமீன்கள் துடிப்புஅற - செருக்கிப் பாயும்இயல்புடைய
மீன்கள் கிளர்ச்சியற்றுப் போகவும்; சுறவு தூங்க - சுறாமீன்கள் அடங்கிக்
கிடக்கவும்; ஒள்ளிய பனைமீன் துஞ்சும் - ஒளிமிக்க பனைமீன்கள் இறக்க
இடனாகும்; திவலைய ஊழிக்காலின் - நீர்த்திவலைகளை வீசுகின்ற
யுகமுடிவில் வீசுகின்ற காற்றைப்போல;வள்உகிர் வீரன் - கூர்மையான
நகத்தைப் பெற்ற அனுமன்; செல்லும் - பாய்ந்து செல்கின்ற; விசைபொர
மறுகி -
வேகமானது தாக்க (அதனால்) அல்லோலப்பட்டு; வாரி தள்ளிய
திரைகள் -
கடலில் உந்தப் பெற்ற அலைகள்; இலங்கைமேல் - இலங்கை
மாநகரின்கண்; முந்துற்று தவழ்ந்த - அனுமனுக்கு முன் தத்திச் சென்றன.

     மாது; ஓ - அசைகள். மகர மீன், சுறவு, பனைமீன் - மீன் வகைகள்.
முந்துற்று - அனுமனுக்கு முன்னே தாம் செல்வன போலச் சென்று என்பது
ஐயரவர்கள் பதிப்பின் குறிப்பு.                             (22)