4766.

மாணிஆம்வேடம் தாங்கி,
    மலர்அயற்குஅறிவு மாண்டு, ஓர்
ஆணிஆய் உலகுக்குஎல்லாம்,
     அறம்பொருள் நிரப்பும் அண்ணல்,
சேண்உயர்நெடுநாள் தீர்ந்த
    
திரிதலைச் சிறுவன் தன்னைக்
காணிய,விரைவில் செல்லும்
    கனகமால்வரையும் ஒத்தான்.
 

     மாணிஆம் வேடம்தாங்கி - பிரமசாரியாகியகோலத்தை
மேற்கொண்டு; மலர் அயற்கு - பிரம்ம தேவனைவிட; அறிவு மாண்டு -
அறிவால் மாட்சிமை பெற்று; உலகுக்கெல்லாம் ஓர் ஆணியாய் - எல்லா
உலகங்களுக்கும் ஒப்பற்ற அச்சாணிபோல அமைந்து; அறம் பொருள் -
அறத்தையும் பொருளையும்; நிரப்பும் அண்ணல் - பூரணத்துவமடையச்
செய்யும் அனுமன்; நெடுநாள்
தீர்ந்த- நீண்ட நாட்களுக்குமுன் பிரிந்து போன;
சேண்உயர் - மிக்க உயர்வினையுடைய ; திரிதலைச் சிறுவன்தன்னை -
திரிகூடம் என்னும் புதல்வனை; காணிய விரைவில் செல்லும் -
காண்பதற்காக வேகமாகப் போகிற; கனகமால் வரையும் ஒத்தான் - பொன்
வடிவமான மேருமலையைப் போன்றிருந்தான்.

     அனுமன் திரிகூடமலையாகிய மைந்தனைத் தேடிச் செல்லும்
மேருமலையைப் போன்றிருந்தான். நிலையில் திரியாது அடங்கும் அனுமனை
மேருமலை என்றும் இல்லறத்திற்கும் துறவறத்திற்கும் ஆதாரமானது அனுமன்
மேற்கொண்ட பிரம்மசரியம் ஆதலின் ஆணி என்றும் கூறினான். அயற்கு
அறிவு மாண்டு - உருபு மயக்கம் ( தொல் - சொல் 111) இராமபிரான்
அனுமனை 'ஆணி இவ்வுலகுக்கு எல்லாம்' என  முன்பு கூறினான்
(3769).                                                (26)