4769.

புறத்துஉறல்அஞ்சி, வேறுஓர்
     அரணம்புக்கு உறைதல் போக்கி,
மறத்தொழில்அரக்கன் வாழும்
     மாநகர்,மனுவின் வந்த
திறத் தகைஇராமன் என்னும்
     சேவகற்பற்றி, செல்லும்
அறத்தகை அரசன்திண்போர்
    ஆழியும்அனையன் ஆனான்.

     புறத்துஉறல்அஞ்சி -வெளிப்படையாக இருக்கப் பயப்பட்டு; வேறுஓர்அரணம் புக்கு - மற்றொரு பாதுகாப்பான இடத்தில்; உறைதல்
போக்கி
-தங்குதலை விலக்கியும்; மனுவின்
வந்த - மனிதனைப்
போன்றுமண்ணுலகுக்கு வந்த; திறத்தகை இராமன் என்னும் சேவகற் பற்றி
- வலிமையும் தகுதியும் பெற்ற இராமபிரான் என்னும் வீரனை இறுகப் பிடித்துக்
கொண்டு; மறத்தொழில் அரக்கன் வாழும் - வீரத்தையே தொழிலாகக்
கொண்ட இராவணன் வாழுகின்ற; மாநகர் - பெரிய நகருக்கு; செல்லும் -
போகிற; அறத்தகையரசன் - தகுதிபெற்ற தருமராஐனின்; திண்போர்
ஆழியும் அனையன் ஆனான்
- வலிமை மிக்க போர்புரியும் ஆணைச்
சக்கரத்தை (அனுமன்) ஒத்திருந்தான்.

     தருமராசன்(யமன்) இலங்கைக்குள் அடியெடுத்து வைத்தான் என்பது
குறிப்பு. ஆதியில் தர்ம தேவதைஎன்றும் கூறலாம். திருமாலின் சக்கரம் என்று
உரைகாண்பது அபசாரம் மனுவின் - மனிதனைப்போல், மனுகுலம் என்றும்
கூறலாம்.                                                (29)