4770.

கேழ்உலாம் முழு நிலாவின்
     கிளர்ஒளிஇருளைக்கீற,
பாழி மா மேரு நாண,
     விசும்புஉறப் படர்ந்த தோளான்,
ஆழி சூழ் உலகம்எல்லாம்
     அருங் கனல்முருங்க உண்ணும்
ஊழி நாள்,வடபால் தோன்றும்
     உவா முழுமதியும் ஒத்தான்.*

     கேழ் உலாம் முழுநிலாவின் கிளர்ஒளி - எல்லா இடத்திலும்
ஒளிபரப்பும் பூரண சந்திரிகையைப் போன்று கிளர்ச்சிபெற்ற (அனுமனின்)
ஒளியானது; இருளைக் கீற - இருளைப் போக்கவும்; பாழி மா மேரு நாண -பருத்த மேருமலை நாணம் அடையவும்; விசும்பு உறப் படர்ந்த தோளான்
-ஆகாயம் அளாவும் தோளையுடைய அனுமான்; ஆழிசூழ் உலகம் எல்லாம்
முருங்க
- கடலால் சூழப்பெற்ற எல்லா உலகங்களும் அழிய; அருங்கனல்
உண்ணும் ஊழி நாள்
- நெருப்பு விழுங்கும் ஊழிக் காலத்தில்; வடபால்
தோன்றும் உவாமுழு மதியம் ஒத்தான்
- வடதிசையில் உதிக்கும்
பௌர்ணமிக் காலத்து முழு மதியையும் ஒத்திருந்தான்.

     அனுமன்ஊழிக்காலத்தில் வடக்குத் திக்கில் உதிக்கும் முழுமதி
போன்றிருந்தான். கேழ் - நிறம் (இங்கே வெண்மை ஒளி) மேரு, அனுமனுக்கு
உவமை. நிலவு என்றது சந்திரிகையை - சந்திரனையன்று. சந்திரன்
போன்றஒளியுடையவன். சந்திரன் போன்றிருந்தான் என்பது
சிறப்பன்று.                                             (30)