அனுமன் வானில்சென்ற காட்சி

4772. 

நாலினோடுஉலகம் மூன்றும்
     நடுக்குற,அடுக்கு நாகர்
மேலின்மேல்நின்றகாறும்
     சென்றகூலத்தன், 'விண்டு
காலினால் அளந்தவான
     முகட்டையும்கடக்கக் கால
வாலினால் அளந்தான்' என்று
     வானவர்மருள, சென்றான்.

     நாலினோடு உலகம்மூன்றும் நடுக்குற - கீழ் ஏழு உலகங்களும்
நடுக்கம் அடைய; நாகர் மேலின்மேல் நின்ற - தேவர்கள் மேலும் மேலும்
சிறப்புடன் நிலைத்துள்ள; அடுக்கு காறும் - அடுக்கப்பெற்ற உலகம்
வரையிலும்; சென்ற கூலத்தன் - பயணம் செய்த வாலையுடைய அனுமன்;
விண்டு காலினால் அளந்த வானமுகட்டையும் கடக்க - திருமாலின்
திருவடியால் அளந்த வானத்தின் உச்சியையும் கடப்பதற்கு; கால வாலினால்
அளந்தான் என்று
- காலபாசம் போன்ற வாலினால் அளந்து விட்டான்
என்று; வானவர் மருளச் சென்றான் - தேவர்கள் வியப்படையப் போயினான்.

     மாயன் காலால்அளந்த உலகத்தை அனுமன் வாலால் அளந்தானோ
என்று வானவர் மருண்டனர். கூலம் - வால். விண்டு - திருமால். கால வால்
-கால பாசத்தை ஒத்தவால்.                                 (32)