4775. | குன்றொடு குணிக்கும் கொற்றக் குவவுத்தோள் குரக்குச் சீயம், சென்றுறு வேகத்திண்கால் எறிதர,தேவர் வைகும் மின்தொடர்வானத்து ஆன விமானங்கள், விசையின் தம்மின் ஒன்றொடு ஒன்றுஉடையத் தாக்கி, மாக் கடல்உற்ற மாதோ. |
குன்றொடுகுணிக்கும் - மலைகளுடன் ஒப்புமையாகப் பேசப்படும்; கொற்றக் குவவுத்தோள் - வெற்றியையுடைய பருத்த தோள்களை உடைய; குரக்குச் சீயம் - வானர சிங்கமாகிய அனுமன்; சென்றுஉறு வேகத் தி்ண்கால் - செல்வதால் உண்டாகும் கடுங்காற்று; எறிதர - மோத (அதனால்);மின்தொடர் வானத்து ஆன தேவர் வைகும் விமானங்கள் - மின்னல்இடையறாது இயங்கும் வானில் தேவர்கள் தங்கியுள்ள விமானங்கள்; விசையின் - வேகத்தால்; தம்மின் ஒன்றொடு ஒன்று உடையத் தாக்கி - தங்களுக்குள் ஒன்றுடன் ஒன்று உடையும்படி மோதி; மாக்கடல் உற்ற - கருங்கடலில் விழுந்தன. அனுமன் வேகமாகச்செல்வதால் உண்டான பெருங்காற்று மோத அதனால் தேவர்களின் விமானங்கள் ஒன்றோடொன்று தாக்கிக் கடலில் விழுந்தன. மாது, ஓ -அசைகள். (35) |