4778. | பொருஅரும் உருவத்து அன்னான் போகின்றபொழுது, வேகம் தருவன தடக் கை,தள்ளா நிமிர்ச்சிய, தம்முள் ஒப்ப, ஒருவுஅருங் குணத்துவள்ளல் ஓருயிர்த்தம்பி என்னும் இருவரும்முன்னர்ச் சென்றால் ஒத்த; அவ்விரண்டு பாலும். |
பொருஅரும்உருவத்து அன்னான் - ஒப்புமையற்ற திருமேனியை உடைய அனுமன்; போகின்றபொழுது - கடல் கடந்து தாவும் சமயத்தில்; தள்ளாநிமிர்ச்சிய - அடக்க முடியாத உயர்வை உடையனவும்; தம்முள் ஒப்ப- தமக்குள் ஒரே மாதிரி இருப்பனவும்; வேகம் தருவன - விரைவைக் கொடுப்பனவுமான; தடக்கை - பெருங்கைகள்; ஒருவுஅரும் குணத்து வள்ளல் - பிரிதல் இல்லாத நற்குணத்தை உடைய இராமபிரானும்; ஓருயிர்த் தம்பி - (அவனுக்கு) ஒப்பற்ற உயிர்போன்ற தம்பியும்; என்னும் இருவரும் - என்று கூறப்பெற்ற இரண்டு சகோதரர்களும்; அவ் இரண்டு பாலும் முன்னர்ச் சென்றால் ஒத்த - இரண்டு பக்கத்திலும் அனுமனுக்கு முன்பக்கம் போவது போன்றிருந்தன. அனுமனின் கைகள்அடக்க முடியாத பெருமிதத் தோற்றத்தாலும் ஒன்று போன்றிருந்தன. (அனுமனுக்கு) இரண்டு புறத்திலும் பாதுகாப்பாகச் செல்லும் இராம இலக்குவர்களை ஒத்திருந்தன. அனுமன் தோழர்கள்பால் 'நும் அருளும், எம்கோன் ஏவலும் சிறைகளாகக் கலுழனிற் கடப்பல்' என்று பேசியதை ஒப்பிடுக (4734). (38) |