4781.

நூல்ஏந்துகேள்வி நுகரார், புலன்
     நோக்கல்உற்றார்
போல், ஏந்திநின்ற தனியாள் மெய்
     பொறாது நீங்க,
கால் ஆழ்ந்துஅழுந்திக் கடல்புக்குழி,
     கச்சம்ஆகி,
மால்ஏந்த ஓங்குநெடுமந்தர
     வெற்புமான.*
 

     நூல் ஏந்துகேள்வி நுகரார் - நூல்களால் கூறப்பெறும்அறிவை
உட்கொள்ளாமல்; புலன் நோக்கல் உற்றார்போல் - புலன்வழியே சென்று
உலகைப் பார்ப்பவரைப் போன்று; ஏந்தி நின்ற தனியாள் மெய் பொறாது
நீங்க
- ஏந்தி நின்ற ஒப்பற்ற நிலமகள் மேனி பொறாமல் விலகிச் செல்ல
(அதனாலே); கால் ஆழ்ந்து அழுந்தி - அடிப்பாகம் கீழே  சென்று முழுகி;
கடல் புக்குழி - கடலில் புகுந்த இடத்தில்; கச்சம் ஆகி - ஆமை வடிவம்
கொண்டு; மால்ஏந்த ஓங்கும் - திருமால் ஏந்துவதால் கடலுக்கு மேல் வந்த;
நெடுமந்தர வெற்பு மான - பெரிய மந்தரமலையை ஒப்ப,

     புலன்வழிச்சென்றவர் போல் ஆண்மை நீங்க, அதனால் கடலில்
அழுந்தும்போது ஆமை உருக்கொண்ட திருமாலால் தாங்கப்பெற மேல்வந்த
மந்தரமலை போல மைநாகமலை மேலே வந்தது. கச்சம் - ஆமை.    (41)