| 4782. | தள்ளற்குஅரு நல்சிறை மாடு தழைப்பொடுஓங்க, எள்ளற்கு அருநல்நிறம் எல்லை இலாதுபுல்ல, வள்ளல் கடலைக்கெட நீக்கி, மருந்து வவ்வி, உள்உற்றுஎழும்ஓர் உவணத்து அரசேயும்ஒக்க,* |
தள்ளற்கு அரும்நல்சிறை - பிறரால் வெட்ட முடியாதநல்ல இறக்கைகள் ; மாடு தழைப்பொடு ஓங்க - பக்கத்தில் செழிப்புடன் உயரவும்; எள்ளற்கு அரு நன்னிறம் - இகழ்ச்சி இல்லாத நல்ல வண்ணம்; எல்லை இலாது புல்ல - மிகுதியாகத் தழுவி விளங்கவும்; வள்ளல் கடலைக் கெட நீக்கி - வளமான கடலரசன் தோற்றுப்போகவென்று அவனை விலக்கி; மருந்து வவ்வி - தேவாமிர்தத்தை அபகரித்து; உள்உற்று எழும் - கடலுக்குள் புகுந்து மேலே எழுந்து வருகின்ற; ஓர் உவணத்து அரசேயும் ஒக்க - ஒப்பற்ற கருடராசனைப் போல. தள்ளற்கு அரு - வெட்டமுடியாத தன் தலையைத் தள்ளத் தரும் என்றவாள்பூட்டிய தடங்கையினன் (திருத்தொண்டர் அந் - 14) மைந்நாகமலை -இந்திரனின் வச்சிரத்தால் வெட்டப்படாமையையும் கருடன் சிறகும் அங்ஙனமேஇருத்தலையும் அறிக. கடலை - ஐ - அல் வழிச் சாரியை - கடல் கெடஎன்க. கெட - தோற்றுப்போக. (42) |