4785. | பூவால்இடையூறு புகுந்து, பொறாதநெஞ்சின் கோ ஆம் முனிசீறிட, வேலை குளித்தஎல்லாம் மூவா முதல் நாயகன் மீள முயன்ற அந்நாள் தேவா சுரர்வேலையில் வந்து எழு திங்கள்என்ன,* |
பூவால் இடையூறுபுகுந்து - இந்திரனுக்கு வழங்கிய மாலையால் துன்பம் உண்டாகி; பெறாத நெஞ்சின் - பொறுமையற்ற உள்ளமுடைய; கோஆம் முனி - தலைமைப் பண்புடைய துருவாச முனிவன்; சீறிட - சீற்றம் அடைய; வேலை குளித்த எல்லாம் - கடலில் மூழ்கிய எல்லாப் பொருள்களும்; மூவா முதல் நாயகன் - முதுமை அடையாத முதன்மையான திருமால்; மீள - அப்பொருள்கள் மீண்டு்ம் வரும்படி; தேவாசுரர் முயன்ற அந்நாள் - தேவாசுரர் மூலம் கடல் கடைந்து முயற்சி செய்த காலத்தில்; வேலையில் வந்து எழு - கடலின் கண்ணே உதயமான; திங்கள் என்ன - சந்திரனைப்போல. தான் வழங்கியமாலையை அவமதித்த இந்திரனைத் துருவாச முனிவர் சபிக்க, விண்ணுலகப் பொருள்கள் கடலில் மறைந்தன. திருமாலும் தேவர்களும் கடல் கடைந்தபோது அவை வெளிப்பட்டன. அப்பொருள்களுடன் வெளிப்பட்ட சந்திரனைப்போல் மைந்நாகமலை வெளிப்பட்டது. (45) |