4787. | கூன் சூல்முதிர் இப்பி குரைக்க நிரைத்தபாசி வான் சூல் மழைஒப்ப, வயங்கு பளிங்குமுன்றில் தான் சூலிநாளில் தகைமுத்தம் உயிர்த்தசங்கம் மீன் சூழ்வரும்அம்முழு வெண் மதி வீறு,கீற,* |
கூன் சூல் முதிர்இப்பி - உடல் வளைந்த முற்றிய கருப்பம் பெற்ற சிப்பிகள்; குரைக்க - ஒலிக்க; நிரைத்த பாசி - வரிசை வரிசையான பாசியானது; வான்சூல் மழை ஒப்ப - வானத்தில் உள்ள கருவுற்ற மேகத்தை ஒத்திருக்க; வயங்கு பளிங்கு முன்றில் - விளங்குகின்ற பளிங்குமுற்றத்தில்; சூலி நாளில் தான் - கருவுயிர்க்கும் காலத்தின் கண்; தகை முத்தம் உயிர்த்த - சிறப்புடைய முத்துக்களை வெளிப்படுத்திய; சங்கம் - சங்கு; மீன் சூழ் வரும் - நட்சத்திரங்கள் சூழ்ந்து வருகின்ற; முழுவெண்மதி வீறு கீற - வெண்மையான பூரண சந்திரனின் பெருமையைக் குறைக்க. கடற்பாசிகள்மேகத்தை ஒத்துள்ளன. முத்துக்களைப் பெற்ற சங்கு நட்சத்திரங்களால் சூழப்பெற்ற பூரண சந்திரனைப் போன்றிருந்தது. சூல் முதிர்கூன் இப்பி என்க. இப்பி -சிப்பி. குரை - ஒலிக்க, தான் - அசை, சூல நாள் எனப் பாடங் கொண்டு, இரேவதி நட்சத்திரத்தில் என்று பொருள் கூறுவர் சிலர். இரேவதி (பிங்கலந்தை 2657) (47) |